Posted by: admin
Comments: 0
Post Date: April 18, 2020
நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவருக்குமான கோரிக்கை.
வணக்கம்!!!
நோர்வே மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் CONVID 19 என்ற கொரோனா கொள்ளைநோயின் தாக்கத்தினால் பால், இன, மத, தேச, வர்க்க பேதமின்றி எல்லோரும் உயிரிழப்பாலும், பொருளாதாரத்தாலும் பாதிப்படைவது யாவரும் அறிந்ததே.
அதிலும் நாம் பிறந்த தேசத்தில், தினசரி உடலுழைப்பின்பால் வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்தவர்களின் நிலை சொல்லி மாளாது. அங்கு நிவாரணம் அரசினால் கிடைக்கிறது என்று செய்திகள் வெளியாகி இருந்தாலும், அதற்கு மாறான தகவல்களும் , உடனடி உணவு உதவி செய்வதற்கான கோரிக்கைகள் நாட்டில் இருந்து சங்கத்தினை நேரடியாகவும், ஏற்கனவே நம் தேசத்தில் வாழ்வாதார உதவி புரிந்த அமைப்புகளாலும் வந்தடைந்துள்ளன.
அந்த வகையில் சங்க நிர்வாகமும் தனக்குரிய தார்மீக கடமையாக நலிவடைந்த எம் மக்களுக்கு “பசி தீர்க்கும்” நிவாரண நடவடிக்கைகளுக்கு வழமை போல் இம் முறையும் உதவிட எண்ணியுள்ளது. ஆனால் இது சங்க அங்கத்தவரான உங்களாலும் மற்றும் நலன்விரும்பிகளதும் ஆதரவு இல்லாமலும், எம்மால் எதுவும் செய்துவிட முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நம்புகின்றோம். மேலும் இங்கு நாமும் அவ்வகையான சூழலில் இருப்பினும், இங்கு இருப்பது போன்ற சமூகப்பாதுகாப்பு (NAV) அவர்களுக்கு இல்லாததும், இன்றைய நிலையில் அவர்களுக்கு நாம் உதவாமல் இருப்பது வரலாற்றுத் தவறாகிவிடும் என்பதினால் உங்களுடம் உதவி கோரி விழைகிறோம்.
அந்த வகையில் நாம் நம் தேசத்தில் நலிவுற்ற நம்மவருக்கு உடனடி உணவு நிவாரணம் வழங்க வழி செய்யும் வகையில், உங்களிடம் இருந்து நிவாரண நிதியினை மிகவும் அவசரமாய் எதிர்பார்க்கிறோம். அதற்காக உங்களிடம் நிதி கோரும் தார்மீக உரிமை உண்டு என்ற அடிப்படையில் இத்தால் உங்களிடமிருந்து நிதி அவசரமாய் கோரப்படுகிறது. உங்களது பங்களிப்பை VIPPS 565992 (Donation- Tamil Sangam i Norge) மூலம் செய்துகொள்வதற்கு ஏதுவாக இத்தால் அறிமுகப் படுத்தப்படுகிறது.
எனவே உங்கள் பங்களிப்புக்களை மிகவிரைவில் எமக்கு தந்துதவுமாறு மிகவும் தாழ்மையுடனும் விநயத்துடனும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!!!
இவ்வண்ணம்
நிர்வாகம் 2020
நோர்வே தமிழ் சங்கம்.