நோர்வே தமிழ்ச் சங்கத்தின் யாப்பு விதிகள்
பிரிவு 1
பெயர்: நோர்வே தமிழ்ச் சங்கம்
Tamil Sangam in Norway
தோற்றம்: 14.01.1979
கொடி: நீள் சதுர அமைப்பில் வெள்ளை, கடுநீலம், சிவப்பு ஆகிய மூன்று நிறங்களுடையது.
இலச்சனை: சேர, சோழ, பாண்டிய சின்னங்களாகிய அம்பு, வில், மீன், புலி மூன்றினையும் இணைக்கும் சக்கரத்தின் நடுவில் முழுச்சூரியன் அமைந்திருக்கும். சூரியனின் கதிர்வீச்சின் மேலே “தமிழ்” என்றும் கீழே “வாழ்க” என்றும் “தமிழ் வாழ்க” என்றும் அமைந்திருக்கும்.
சங்க கீதம்: ஹம்சத்வனி இராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த “நோர்வே தமிழ்ச் சங்கம் வாழிய” என்று ஆரம்பிக்கும்.
பிரிவு 2
அங்கத்துவம்: இச்சங்கத்தில் எல்லாத் தமிழர்களும் மற்றும் தமிழ்மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களும் அங்கத்துவம் பெறலாம்.
பிரிவு 3
நோக்கம்:
நோர்வே வாழ் தமிழர்கள் மத்தியில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல்.
நோர்வே வாழ் பல்லின சமூகங்களுக்கிடையிலான உறவுகளைப் பேணுதல்.
தமிழர் கலை, கலாசாரம், நாகரீகம் ஆகியவற்றைப் பேணிப் பரிமாறுவதுடன், பல்லின சமூகத்தினரின் கலை, கலாசாரங்களை உள்வாங்குதல்.
நோர்வே வாழ் தமிழர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதுடன் உலகில் மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்தல்.
பிரிவு 4
அமைப்பு:
இச்சங்கம்
பொதுச்சபை
நிர்வாகசபை
ஆகிய கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.
1. பொதுச்சபை:
பொதுச்சபையானது அங்கத்துவத் தகுதியுடைய எல்லா உறுப்பினர்களையும் உள்ளடக்கும். பொதுச்சபையே, இச்சங்கத்தின் நோக்கம், கொள்கை, செயற்திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கும் மிக உயர்ந்த அமைப்பாகும்.
பொதுச்சபையின் உரிமைகளும் கடமைகளும்
இச்சங்கத்தின் கொள்கைகளை நிறைவேற்றுதல்.
இச்சங்கத்தின் திறமையான நிர்வாகத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆலோசனை வழங்குதல்.
இச்சங்கம் சம்பந்தமான எவ்விடயம் பற்றியும் கேள்வி எழுப்பும் உரிமை பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு உண்டு.
நிர்வாகம் பிரத்தியேகமானது எனக்கருதும் தனிநபர் உரிமைகள் தொடர்பான விபரங்கள் தவிர்ந்த ஏனைய ஆவணங்களைப் பார்வையிடும் உரிமை அங்கத்தவர்களுக்கு உண்டு. மேற்கூறிய ஆவணங்களைப் பெறவிரும்பின் எழுத்துமூலம் மூன்று கிழமைகள் அவகாசத்துடன் நிர்வாகசபைக்கு அறிவிக்க வேண்டும்.
பொதுச்சபை உறுப்பினர்களின் அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, கைத்தொலைபேசி இலக்க மாற்றங்கள் உடனுக்குடன் எழுத்துமூலம் நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
2. நிர்வாகக்குழு:
இக்குழு, இச்சங்கத்தின் அங்கத்தவர்களிலிருந்து அங்கத்தவர்களால் தெரிவுசெய்யப்படும் பின்வரும் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமையும்.
இணைப்பாளர்
உப இணைப்பாளர்
செயலாளர்
உப செயலாளர்
பொருளாளர்
உப பொருளாளர்
கலைச் செயலாளர்
உப கலைச்செயலாளர்
அரசியற் செயலாளர்
விளையாட்டுச் செயலாளர்
உப விளையாட்டுச் செயலாளர்
நிர்வாகக்குழுவின் உரிமைகளும் கடமைகளும்
பொதுச்சபை எடுக்கும் முடிவுகளை அமுலாக்கல்.
சங்கத்துக்கான புதிய செயற்திட்டங்கள், வரவு, செலவுத் திட்டங்களை உருவாக்குதல்.
பொதுச்சபையைக் கூட்ட முடியாத அவசர நிலமைகளில், முடிவுகளை எடுக்கவும், அமுலாக்கவும் அதிகாரமுண்டு.
விசேட குழுக்களை பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் உருவாக்கும் உரிமையுண்டு.
அங்கத்தவர்களின் தனிப்பட்ட விபரங்களை இரகசியமாகப் பாதுகாத்தல்.
மூன்றுபேர் கொண்ட தேர்தல் நடாத்தும் குழுவைப் பொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்தல்.
எந்த ஒரு நிர்வாகசபை உறுப்பினரும் நிர்வாகத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.
நிர்வாகக்குழு உறுப்பினர் பொதுச்சபையில் கேள்வி எழுப்ப முடியாது.
நிர்வாகக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் பொதுச்சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
ஆண்டறிக்கை, அங்கத்தவர்கள் விபரங்கள் யாவும் புதிய இணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
நிர்வாகக் கூட்டங்களுக்கு தவறாமல் சமூகமளிக்க வேண்டும்.
தமிழ்ச்சங்கத்தை நிர்வாகிக்கும் உறுப்பினர்கள், தமிழ்ச்சங்கத்தினதும் சமூகத்தினதும் நலன்களைப் பாதிக்காத வண்ணம் செயற்படுதல் வேண்டும்.
நிர்வாகக்குழு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்
* இணைப்பாளர்:
பொதுச்சபைக் கூட்டம், நிர்வாகசபைக் கூட்டம் உட்பட, இச்சங்கம் சம்பந்தப்பட்ட சகல பொது நிகழ்ச்சிகளையும் தலைமை தாங்கி வழிநடத்துதல்.
சங்கத்தின் சகல நிர்வாக செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து இயக்கும் பொறுப்பை மேற்கொள்வார்.
சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு மட்டுமே பதிலளிக்கவேண்டிய கடமைப்பாடு உடையவர்.
சங்கத்தின் ஆவணங்களை எச்சந்தர்ப்பத்திலும் பார்வையிடும் அதிகாரம் கொண்டவர்.
இணைப்பாளர் எடுக்கும் முடிவுகள் யாவும் நிர்வாகசபையின், நிர்வாகசபைக் கூட்டத்தில் பங்களித்தவர்களில் 2/3 பங்கின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட வேண்டும்.
அவசர நிர்வாகசபைக் கூட்டங்களுக்கு நேரடியாக சமூகமளிக்க முடியாத நிர்வாகசபை உறுப்பினர்களின் அங்கீகாரம் இலத்திரனியல் தொடர்புசாதனங்கள் மூலம், எழுத்துமூலம் பெறப்படவேண்டும் (E-Mail).
* உப இணைப்பாளர்:
இணைப்பாளருக்கு உதவியாகச் செயற்படுவதுடன், அவர் இல்லாத பட்சத்தில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் செயற்படுவார்.
* செயலாளர்:
இணைப்பாளர், உப இணைப்பாளர் இல்லாத வேளைகளில் கூட்டங்களைக் கூட்டும் அதிகாரம் கொண்டவர்.
சங்கத்தினால் கூட்டப்படும் சகல கூட்டங்களின் அறிக்கைகளைப் பதிவுசெய்தல், முன்னர் நிகழ்ந்த கூட்ட அறிக்கையை நிர்வாக சபையிலும், பொதுச்சபையில் வாசித்தல் போன்றவற்றுக்குப் பொறுப்பானவர்.
நிகழ்ச்சிநிரலுடன்கூடிய கூட்ட அறிவித்தல்களை சங்க அங்கத்தவர்களுக்கு 14 நாட்களுக்குமுன் எழுத்துமூலம் அறிவித்தல்.
சங்கத்தின் ஆவணங்கள் உட்பட எல்லா சொத்துகளையும் பாதுகாத்தல், அவைபற்றிய விபரங்களைப் பதிவுசெய்தல்.
சங்கத்தின் உள், வெளித் தொடர்புகளைப் பேணுதல்.
குறைந்தது மாதம் ஒருமுறை நிகழும் நிர்வாகக்குழுக்கூட்ட அறிவித்தலை நிகழ்ச்சிநிரல்களுடன் 14 நாட்களுக்குமுன் நிர்வாகசபைக்கு அறிவிக்கும் பொறுப்புடையவர்.
* உப செயலாளர்:
செயலாளரின் கடமைகளில் உதவியாக இருப்பதுடன், அவர் இல்லாத வேளைகளில் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் செயற்படுவார்.
* பொருளாளர்:
சங்கத்தின் வரவு, செலவுகளுக்குப் பொறுப்பாக இருத்தல். சங்கத்தின் வரவு, செலவுப் பதிவேடுகளைப் பேணுதல்.
சங்கத்தின் வரவு, செலவு சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பமிடும் அதிகாரம் உடையவர்.
சங்கத்தின் வங்கிக்கணக்கை இலத்திரனியல் முறைமூலம் கையாளுதல் வேண்டும்.
சங்கத்தின் வங்கிப் பணப்பரிமாற்றத்தை உப பொருளாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோர் மாதம் ஒருமுறை எழுத்துமூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
பொருளாளரின் பதவிக்காலம் முடியும்போது அல்லது அவர் பதவி விலகும் சந்தர்ப்பத்தில் 14 நாட்களுக்குள் வங்கிக்கணக்குத் தொடர்பில் இருந்து விலகி, பொறுப்பை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
சங்கத்தின் வரவு, செலவுக் கணக்கின் விபரமான அறிக்கையை, கார்த்திகை மாதம் நடைபெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் வாசித்து விளக்கம் கொடுக்க வேண்டும். அத்துடன் மாசிமாதம் 15ஆம் திகதிக்குமுன் அரசாங்க பதிவுபெற்ற கணக்காளர் (Revisør) ஒருவரிடம் கணக்குகள் யாவற்றையும் கொடுத்து, பரிசீலித்து, அத்தாட்சிப் படுத்தப்பட்டபின், எடுத்து புதிய பொறுப்பாளரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு இவருடையது.
* உப பொருளாளர்:
பொருளாளரின் கடமைகளில் உதவியாக இருப்பதுடன், அவர் இல்லாத வேளைகளில் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் செயற்படுவார்
* கலைச்செயலாளர்:
இச்சங்கத்தால் மேற்கொள்ளப்படும் சகல கலை, கலாசார நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.
சங்கத்தால் மேற்கொள்ளப்படும் கலை, கலாசார நடவடிக்கைகளுக்கான அறிக்கைகளைத் தயாரித்தல்.
கலைநிகழ்வுகள் யாவும் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து 2/3 பங்கு அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நோர்வே வாழ் தமிழ்க் கலைஞர்களுக்கும், மற்றும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ்க் கலைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
* உப கலைச்செயலாளர்:
கலைச் செயலாளரின் கடமைகளில் உதவியாக இருப்பதுடன், அவர் இல்லாத வேளைகளில் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் செயற்படுவார்.
* அரசியல் செயலாளர்:
சங்கத்தால் மேற்கொள்ளப்படும் சகல அரசியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.
சங்கத்தால் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கான அறிக்கைகளைத் தயாரித்தல்.
* விளையாட்டுச் செயலாளர்:
சங்கத்தால் நடாத்தப்படும் சகல விளையாட்டு நிகழ்வுகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.
விளையாட்டு அறிக்கை, அட்டவணை போன்றவற்றைத் தயாரித்தல்.
விளையாட்டு நிகழ்வுகள் யாவும் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, நிர்வாகசபையின் 2/3 பங்கு அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் விளையாட்டுக் கழகங்களுடன் பாரபட்சமற்ற முறையில் தொடர்புகளைப் பேணுதல்.
* உப விளையாட்டுச் செயலாளர்:
விளையாட்டுச் செயலாளரின் கடமைகளில் உதவியாக இருப்பதுடன், அவர் இல்லாத வேளைகளில் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் செயற்படுவார்.
பிரிவு 5
மாதர் பிரிவு
– 5 நிர்வாகிகளைக் கொண்டிருக்கும்.
– மகளிர் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருத்தல்.
– சகல நிர்வாகக்குழுக் கூட்டங்களுக்கும் வருகைதரும் கடமையுடையோர்.
பிரிவு 6
உதவிக்குழுக்கள்
– கலை உதவிக்குழு
– விளையாட்டு உதவிக்குழு
* கலை உதவிக்குழு:
பொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.
கலைச்செயலாளருக்குக்கீழ் இயங்கும்.
சங்கத்தால் நடாத்தப்படும் சகல கலை நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
நிர்வாகசபைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் சமயங்களில் சமூகமளித்தல் அவசியம்.
* விளையாட்டு உதவிக்குழு:
பொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்துபேர் கொண்ட குழுவாக இருக்கும். சங்கத்தால் நடாத்தப்படும் சகல விளையாட்டு நிகழ்வுகளுக்கும் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
விளையாட்டுச் செயலாளரின்கீழ் செயற்படுவார்கள்.
நிர்வாகசபைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் சமூகமளித்தல் அவசியம்.
பிரிவு 7
சங்கக் கூட்டங்கள்
* சாதாரண பொதுச்சபைக் கூட்டம்:
வருடத்தில் மூன்றுமுறை நடைபெறும் (வைகாசி, ஆவணி, கார்த்திகை)
கூட்ட அறிவித்தல்கள் குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பாக அங்கத்தவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
பொதுச்சபைக் கூட்டத்தில் விசேட பிரேரணைகள் சேர்க்கப்பட வேண்டுமாயின், கூட்டத்துக்கு மூன்று வாரங்களுக்குமுன் நிர்வாகத்துக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்.
கூட்டத்துக்கு சமூகமளித்த 2/3 பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம்
* விசேட பொதுச்சபைக் கூட்டம்:
இத்தகைய கூட்டம் அவசியம் என நிர்வாகம் கருதுமிடத்து, 2/3 பங்கு நிர்வாகசபை அங்கத்தவர் அங்கீகாரத்துடன் கூட்டம் கூட்டப்படலாம்.
பொதுச்சபை அங்கத்தவர்களில் அறுபது அங்கத்தவர்களால் காரணம் காட்டி விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் கூட்டப்படலாம்.
* சாதாரண நிர்வாகக்குழுக் கூட்டம்:
குறைந்தது மாதம் ஒருமுறை இணைப்பாளரால் கூட்டப்பட வேண்டும்.
கூட்ட அறிவித்தல்களை ஏழு நாட்களுக்கு முன்னதாக நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
குறைந்தது ஆறு உறுப்பினர்கள் சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் நிர்வாகக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும்.
நிர்வாகக்குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிக்க முடியாத நிர்வாகசபை உறுப்பினர்கள், முன்கூட்டியே செயலாளருக்கோ அல்லது இணைப்பாளருக்கோ எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும் (இலத்திரனியல்/ Email).
* அவசர நிர்வாகக்குழுக் கூட்டம்:
நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஆறுபேர் எழுத்துமூலம் காரணம் காட்டி விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் கூட்டம் கூட்டப்படலாம்.
தகுந்த காரணத்துடன் அவசியம் எனக் கருதின் இணைப்பாளர் கூட்டத்தைக் கூட்டலாம்.
* வருடாந்த நிர்வாகக்குழுத் தெரிவுக்கூட்டம்:
புதிய நிர்வாகக்குழு கார்த்திகைமாதம் இக்கூட்டம் மூலம் தெரிவு செய்யப்படும்.
பிரிவு 8
சங்க நடப்புவருடம்
* வருடத்தின் தைமாதம் முதலாம் திகதியில் (01.01) இருந்து மார்கழிமாதம் முப்பத்தியோராம் திகதிவரை (31.12) சங்க நடப்புவருடமாகக் கருதப்படும்.
பிரிவு 9
சந்தாப்பணம்
* சங்க அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் சங்கத்தின் நலனுக்காக பொதுச்சபையால் தீர்மானிக்கப்படும் சந்தாப்பணத்தை வழங்க வேண்டும். சந்தாப்பணம் செலுத்தியோர் மட்டுமே அங்கத்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களே பொதுச்சபையில் வாக்குரிமை உடையவர்கள்.
சந்தா ஆண்டு
* தைமாதம் முதலாம் திகதியிலிருந்து (01.01) மார்கழிமாதம் முப்பத்தியோராம் திகதிவரை (31.12) சங்க சந்தா ஆண்டாகக் கருதப்படும்.
பிரிவு 10
தேர்தலும் வாக்குரிமையும்
* தேர்தல்குழு:
சங்கத்தின் நிர்வாகக்குழுத் தேர்தலை நடாத்துவதற்கென மூன்று அங்கத்தவர் கொண்ட தேர்தல்குழு ஒன்றை தேர்தலுக்கு ஒருமாதத்துக்கு முன்பாகவே பொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்தல் வேண்டும்.
* வயது:
பதினாறு வயதுக்கு மேற்பட்டோரே பங்குகொள்ளலாம்.
* நிர்வாகக்குழுத் தேர்தல்:
குறைந்தது ஒருவருட காலமாவது நோர்வே தமிழ்ச்சங்கத்தில் அங்கத்துவம் வகித்தவர்கள் நிர்வாகக்குழுத் தேர்தலில் பங்குபற்றலாம். அப்படியானவர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் புதிய உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாம்.
* நிர்வாகக்குழு அங்கத்துவம்:
வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகத்தில் இருந்து செயற்படுவோர், தமிழ்ச்சங்கத்தின் முதல் 5 முக்கிய பதவிகளில் இருக்கமுடியாது.
* நியமனத்தாக்கலும் வாக்கெடுப்பும்:
பொதுத்தேர்தலுக்கு நிர்வாகக்குழுவினால் வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் வேட்பாளர்கள் எழுத்துமூலம் தமது நியமனப் பத்திரங்களை தெரிவுக்குழுவுக்குத் தாக்கல் செய்யவேண்டும். பதவிகளுக்கு எவரும் நியமனத்தாக்கல் செய்யாவிடத்து, பொதுச்சபையிலிருந்து பதவிகளுக்கான வெற்றிடங்கள் தேர்தல் மூலமாகவோ அல்லது ஏகமனதாகவோ தீர்மானிக்கப்படும். எல்லா வாக்கெடுப்புகளும் இரகசியமானதாக அமையும்.
* தேர்தல்பற்றிய அறிவித்தல்கள்:
தேர்தல் சம்பந்தமான விபரங்கள் சங்க அங்கத்தவர்களுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக நிர்வாகக்குழுவினரால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட வேண்டும்.
* சொத்துகள் ஒப்படைப்பு:
பழைய நிர்வாகம், தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகத்திடம் சங்க அறிக்கைகள், ஆவணங்கள், சொத்துகள் போன்றவற்றை மார்கழிமாத இறுதி வாரத்துக்குமுன் ஒப்படைக்க வேண்டும். வழங்கப்பட்ட, பெறப்பட்ட ஆவணங்களுக்குரிய அத்தாட்சிப்பத்திரம், பரஸ்பரம் எழுத்துமூலம் வழங்கப்பட வேண்டும்.
பிரிவு 11
சங்கத்தின் கணக்குப் பரிசோதகர்
* பொதுச்சபையால் தெரிவுசெய்யப்படுவார்.
* மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை சங்கத்தின் வரவு, செலவுக் கணக்குகளை பரிசீலனை செய்து கையொப்பம் இடுவார்.
* அவசியம் ஏற்படின் எச்சந்தர்ப்பத்திலும் சங்கத்தின் வரவு, செலவுக் கணக்கைப் பார்வையிடலாம்.
* பொதுச்சபைக்கு வெளியிடும் இறுதிக் கணக்கு அறிக்கையைப் பரிசீலனை செய்து கையொப்பம் இடுவார்.
பிரிவு 12
சங்க நலன்கருதி ஒழுங்காற்று நடவடிக்கை
* அங்கத்துவம் இழத்தல்.
* பொதுச்சபையிலிருந்து வெளியேற்றப்படல்.
பொதுச்சபை உறுப்பினர் ஒருவர் சபைக்குப் பண்பற்றமுறையிலோ, ஒழுங்கீனமாகவோ, சங்க விதிமுறைகளுக்குப் புறம்பாகவோ நடந்துகொள்ளுமிடத்து பொதுச்சபையின் 2/3 பங்கினரின் வேண்டுகோளுக்கிணங்க, தகுந்த காரணங்களுடன் சங்கத்தின் பொதுச்சபையிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் அங்கத்துவத்தை இழக்கவும் நேரிடலாம்.
பிரிவு 13
விழாக்கள்
தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டுவிழா, சங்க ஆண்டுவிழா, நத்தார் விழா என்பன கொண்டாடப்படும். தேவையேற்படின், பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் விசேட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தலாம்.
பிரிவு 14
நம்பிக்கையில்லாப் பிரேரணை
* பொதுச்சபை அங்கத்தினர்மீதோ அல்லது நிர்வாக உறுப்பினர்மீதோ நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர விரும்பின், அப்பிரேரணை எழுத்துமூலம் ஒருமாதகால முன்னறிவித்தலுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்பிரேரணையானது பொதுச்சபையில் விவாதிக்கப்பட்டு, சமூகங்கொடுத்த 2/3 பகுதிப் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.
பிரிவு 15
சங்கத்தைக் கலைத்தல்
* சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அங்கத்தவர்களின் சம்மதத்துடனேயே சங்கத்தைக் கலைக்க முடியும்.
பிரிவு 16
சங்கவிதிகள் மாற்றம்
* சங்கத்தின் யாப்புவிதிகளில் மாற்றம் அல்லது திருத்தம் ஏற்படுத்த வேண்டுமாயின், அதனை நிர்வாகசபை 3 வாரங்களுக்கு முதல் அங்கத்தவர்களுக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தி, பொதுச்சபையின் 2/3 பங்கு அங்கத்தவர்களின் ஆதரவுடனேயே செயற்படுத்தமுடியும்.